ஆதித்யா-எல்1 செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா-எல்-1’ விண்கலம் வருகிற 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Update: 2023-08-26 21:15 GMT

'ஆதித்யா-எல்1' திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 3-வது நிலவு பயணமான 'சந்திரயான்-3' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனைத்தொடர்ந்து சூரியன் ஆய்வுப்பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கி உள்ளனர். 'ஆதித்யா-எல்1' சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய பணியாகும். 'ஆதித்யா' என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயிண்ட்-1'-ஐ மையமாக கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த திட்டத்துக்கு 'ஆதித்யா- எல்1' என்று பெயரிட்டு உள்ளது. 'ஆதித்யா- எல்1' லெக்ஞ்சியன் புள்ளி 1-ல் இருந்து சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.

2-ந் தேதி ஏவப்படுகிறது

பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் 'லாக்ரேஞ்ச்' புள்ளி 1 (எல்1)ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப்பாதையில் விண்கலம் நிறுத்தப்படுகிறது. எல்1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்டப் பாதையில் செயற்கைகோள், சூரியனை எந்த மறைவு கிரகணமும் இல்லாமல் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் பல ஆய்வுகளை செய்ய உள்ளது. இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை உண்மையான நேரத்தில் கவனிப்பதில் அதிக பலன்கள் கிடைக்கிறது.

இந்த விண்கலம் 7 கருவிகளுடன் (பேலோடுகள்) பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

அறிவியல் சவால்

'ஆதித்யா- எல்1' சூரியனின் கொரோனா (அருகில் உள்ள அகச்சிவப்பு கதிர்கள்), சூரியனின் ஒளிக்கோளம் (மென்மையான மற்றும் கடினமான எக்ஸ்ரே), குரோமோஸ்பியர் (அல்ட்ரா வயலட்), சூரிய உமிழ்வுகள், சூரியக்காற்று மற்றும் எரிப்புகள் மற்றும் கரோனல் மாஸ் எஜெக்சன்கள் (சி.எம்.இ.எஸ்.) ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், சூரியனை கடிகார 'இமேஜிங்' செய்ய உள்ளது.

இவற்றில் பல சவால்களும் உள்ளன. குறிப்பாக பூமியில் இருந்து சூரியனின் தூரம் (சராசரியாக சுமார் 15 கோடி கி.மீ. சந்திரனுக்கான 3.84 லட்சம் கி.மீ. தூரத்துடன் ஒப்பிடும்போது). இந்த பெரிய தூரம் ஒரு அறிவியல் சவாலாகும். இதில் உள்ள அபாயங்கள் காரணமாக, முந்தைய இஸ்ரோ பணிகளில் கருவிகள் (பேலோடுகள்) பெரும்பாலும் விண்வெளியில் நிலையாகவே இருந்தன. இருந்தாலும் 'ஆதித்யா-எல்1' நகரும்போது மோதலின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சூரிய வளிமண்டலத்தில் அதிக வெப்பமான வெப்பநிலை மற்றும் கதிர்வீச்சு சிக்கலும் உள்ளது. இருப்பினும், 'ஆதித்யா எல்1' வெகு தொலைவில் இருந்து ஆய்வுப்பணியை திறம்பட செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முக்கியத்துவம்

பூமி மற்றும் சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புறக்கோள்கள் உள்பட ஒவ்வொரு கிரகத்தின் பரிணாம வளர்ச்சியும் அதன் தாய் நட்சத்திரத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதாவது நமது விஷயத்தில் சூரியன், சூரிய வானிலை மற்றும் சுற்றுச்சூழல் முழு அமைப்பின் வானிலையையும் பாதிக்கிறது. எனவே சூரியனை ஆய்வு செய்வது மிக முக்கியமாக இருக்கிறது. வானிலையில் ஏற்படும் மாறுபாடுகள் செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையை மாற்றலாம் அல்லது அவற்றின் ஆயுளை குறைக்கலாம்.

மின்னியல் சாதனங்களில் குறுக்கிடலாம் அல்லது சேதப்படுத்தலாம் மற்றும் பூமியில் மின் தடைகள் மற்றும் பிற இடையூறுகளை ஏற்படுத்தலாம்.

சூரிய நிகழ்வுகள் பற்றிய அறிவு விண்வெளி வானிலையை புரிந்துகொள்வதற்கு முக்கியமாகும். பூமியை இயக்கும் புயல்களை பற்றி அறியவும், கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தை கணிக்கவும், தொடர்ச்சியான சூரிய ஆய்வு தேவைப்படுகிறது. இந்த பணிக்கான பல கருவிகள் மற்றும் அவற்றின் கூறுகள் நாட்டிலேயே முதல் முறையாக தயாரிக்கப்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்