ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த அதிகாரிகள்... துப்பாக்கியால் மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த நபர்..!
டெல்லியில் ஏடிஎம்மில் பணம் நிரப்பவந்த அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
புதுடெல்லி,
வடக்கு டெல்லியின் வஜிராபாத் மேம்பாலத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக இரண்டு அதிகாரிகள் வேனில் இருந்து ரூ.10 லட்சம் கொண்ட பணப்பையை ஏடிஎம்மிற்குள் கொண்டுவந்தனர்.
அப்போது இரு கைகளிலும் துப்பாக்கியுடன் அங்கு வந்த முகமுடி அணிந்த நபர் ஒருவர், வேனில் இருந்த பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டார். இதனை கண்ட வேனில் இருந்த டிரைவர், வெளியே குதித்து ஓடினார். துப்பாக்கி சத்தைத்தை கண்டு பதறிய அதிகாரிகள், ஏடிஎம்மை விட்டு வெளியேற முயன்றனர்.
அப்போது, அந்த நபர், சைகை மூலம், ஏடிஎம்மில் உள்ள பணப்பையை எடுத்துத்தரும்படி கூறினார். இதையடுத்து அதிகாரிகளில் ஒருவர் அந்த நபரிடம் ரூ.10 லட்சம் கொண்ட பணப்பையை கொடுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
பணப்பையை பெற்றுக்கொண்ட கொள்ளையன், அசால்டாக அந்த இடத்தை விட்டு தப்பியோடினார். துப்பாக்கியால் சுட்டதில், பாதுகாவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி முனையில் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.