லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்- மந்தர் கவுடா எம்.எல்.ஏ. எச்சரிக்கை

அரசு அலுவலகத்திற்கு வரும் மக்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மந்தர் கவுடா எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-14 18:45 GMT

குடகு:-

லஞ்ச புகார்

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் எச்.என்.நரகுந்த். கடந்த சில மாதங்களாக இந்த தாலுகா அலுவலகத்திற்கு வருபவர்களிடம் தாசில்தார் உள்பட அதிகாரிகள் அதிகளவு பணம் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் பொதுமக்கள் தரப்பில் மந்தர் கவுடா எம்.எல்.ஏ.விடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மந்தர் கவுடா எம்.எல்.ஏ. தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளை அழைத்த மந்தர் கவுடா எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்தார். 'விவசாயிகள், ஏழை மக்கள் உதவி கேட்டு வந்தால், அதனை உடனே செய்து கொடுக்கவேண்டும். எந்த ஆவணங்கள் கோரி விண்ணப்பம் செய்தாலும், உடனே அதை வழங்கவேண்டும்.

பணி நீக்கம் செய்யப்படுவார்கள்

அரசு பணிகளை செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனி யாரேனும் லஞ்சம் வாங்கியதாக தகவல் கிடைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தாலுகா அலுவலகத்திற்கு இடைத்தரர்கள் வரக்கூடாது. இடைத்தரர்களை வைத்து செயல்படும் அரசு அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். 15 வருடமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக நாட்கள் ஒரே இடத்தில் ஒரே அதிகாரி பணியாற்ற கூடாது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். இனி பொதுமக்கள் தரப்பில் எந்த புகாரும் வராதப்படி அதிகாரிகள் பார்த்து கொள்ளவேண்டும். மீறி புகார் வந்தால் அரசு தரப்பில் நடவடிக்கை பயங்கரமாக இருக்கும்'என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்