பா.ஜனதா போராட்டத்தின்போது ஒடிசா எதிர்க்கட்சி தலைவர்- பெண் போலீஸ் அதிகாரி மோதல்

ஒடிசாவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த பா.ஜனதா போராட்டத்தின்போது, ஒடிசா எதிர்க்கட்சி தலைவரும், பெண் போலீஸ் அதிகாரியும் மோதிக் கொண்டனர்.

Update: 2023-02-16 23:16 GMT

கோப்புப்படம்

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதள அரசு நடந்து வருகிறது. அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது.

சம்பல்பூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின்போது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெய்நாராயண் மிஸ்ராவுக்கும், சம்பல்பூர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் அனிதா பிரதானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் போலீசில் மாறிமாறி புகார் கொடுத்தனர்.

அனிதா பிரதான் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:-

பா.ஜனதாவினர் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றபோது, நான் தடுக்க முயன்றேன். அப்போது, ஜெய்நாராயண் மிஸ்ராவை நேருக்குநேர் சந்திக்க வேண்டி இருந்தது.

அவர் என்னை யார் என்று கேட்டார். நான் என் பெயரை சொன்னேன். நான் லஞ்சம் வாங்குவதாக அவர் குற்றம் சாட்டினார். 'கொள்ளைக்காரி' என்று திட்டியபடியே என் முகத்தில் கைவைத்து தள்ளினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை ஜெய்நாராயண் மிஸ்ரா மறுத்துள்ளார். அவர் தனது புகாரில் கூறியிருந்ததாவது:-

பெண் தொண்டர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக தகவல் வந்ததால், நான் சென்றேன். ஆனால், பெண் இன்ஸ்பெக்டர் என்னை திட்டி, பின்னால் தள்ளினார். நான் அவரை தள்ளவில்லை.

போலீசுக்கு எதிராக புகார் கொடுத்ததால் என் மீது சதி செய்கின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

இருவரும் பரஸ்பரம் புகா்ா அளித்ததால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கள அறிக்கை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்றும் சம்பல்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கங்காதர் தெரிவித்தார்.

மேலும், ஒடிசா போலீஸ் சங்கம், ஜெய்நாராயண் மிஸ்ரா மீது நடவடிக்கை கோரி போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதா-பிஜு ஜனதாதளம் இடையேயும் வார்த்தை மோதல் வெடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்