18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை...!! கணவரின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஐகோர்ட்டு

18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார்.;

Update:2024-01-16 19:24 IST

கோப்பு படம்

போபால்,

மத்திய பிரதேசத்தில் நீதிபதிகள் ஷீல் நகு மற்றும் வினய் ஷரப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

இதன்படி, மனுதாரருக்கு 2006-ம் ஆண்டு ஜூலையில் திருமணம் நடந்தது. ஆனால், அவருடன் சேர்ந்து வாழ அவருடைய மனைவி மறுத்திருக்கிறார்.

திருமண நிகழ்வை ஏற்று கொள்ள மறுத்ததுடன், கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்து விட்டனர் என்று அந்த பெண் கணவரிடம் முதலிரவில் கூறியுள்ளார். அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருந்துள்ளார். இதனால், கணவரிடம் தன்னை காதலரிடம் சேர்த்து வைக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார்.

இதனை கேட்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அதே மாதத்தில், அந்த கணவர் வேலைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். இதனால், அவருடைய மனைவி செப்டம்பரில், பிறந்த வீட்டுக்கு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவேயில்லை.

இதனால், 2011-ம் ஆண்டு போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு பதிவு செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு அவருடைய மனு தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இதுபற்றிய ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அந்நபர் உடல்ரீதியிலான திறனற்றவராக இல்லாதபோது அல்லது தகுதியான காரணம் எதுவுமின்றி ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு, பாலியல் உறவு வைத்து கொள்ள ஒருதலையாக மறுப்பது என்பது, மனதளவில் கொடுமை செய்யும் அளவுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்தது.

இந்த திருமணம் முறைப்படி நடந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்தியாவை விட்டு கணவர் வெளிநாடு செல்வார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில், திருமணம் முழுமையடைவதற்கான நம்பிக்கையுடன் மனுதாரர் இருந்துள்ளார்.

ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செயல் நிச்சயம் மனதளவில் கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகும் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து அந்த நபருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. இதனால், 18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்