நீட் வினாத்தாள் கசிந்ததா..? உண்மை தெரியாமல் காங். பொய்களை பரப்புகிறது: தர்மேந்திர பிரதான் விளக்கம்

நீட் தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 15:47 GMT

புதுடெல்லி:

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றதும், குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றதும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் "நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது மட்டுமே பிரச்சினை கிடையாது. இதுதவிர பல்வேறு முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும், ஊழல்களும் நடந்துள்ளன" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எந்த மாணவரும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு, ஊழல், வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி மட்டுமின்றி மாணவர்களின் மன அமைதியையும் பாதிக்கிறது.

எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு பிரச்சினை எதுவும் இல்லாததால், இதுபோன்ற உணர்ச்சிகரமான பிரச்சினையில் உண்மைகளை அறியாமல் பொய்களைப் பரப்புகின்றன. காங்கிரஸ் தனது அற்ப அரசியலுக்காக நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது

வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடு எதுவும் நடக்காமல் தேர்வை நடத்தவும், பல கடுமையான விதிகளைக் கொண்ட பொதுத் தேர்வு சட்டத்தை மத்திய அரசு இந்த ஆண்டு நிறைவேற்றியது என்பதை காங்கிரஸ் கட்சிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஏதேனும் சிக்கல் இருந்தால் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று காங்கிரஸ் தவறான எண்ணத்தில் இருக்கக் கூடாது. இந்த சட்டத்தின் விதிகள் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மறுதேர்வில் பங்கேற்க விரும்பவில்லை என்றால், அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் (கருணை மதிப்பெண்கள் இல்லாமல்) வழங்கப்படும். அந்த மதிப்பெண்களே கவுன்சிலிங்கில் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்