மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தது 'இந்தியா" கூட்டணி
'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை,
பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டத்தை 2 நாட்கள் மராட்டிய தலைநகர் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மராட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டணியான 'மகா விகாஸ் அகாடி' ஏற்பாடு செய்தது.
பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தை காட்டுவதிலேயே தீவிரம் காட்டின. ஆனால் மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பைக்கு வர தொடங்கினர். நேற்று ஏராளமான தலைவர்கள் குவிந்தனர். எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால் மும்பை நகரம் பரபரப்பாக காணப்பட்டது.இதையடுத்து மாலையில் மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள 'கிராண்ட் ஹயாத்' நட்சத்திர ஓட்டலில் கூட்டம் தொடங்கியது. மாலை 6 மணி முதல் தலைவர்கள் ஓட்டலில் கூட்டம் நடைபெறும் மாநாட்டு அரங்கிற்கு வரத் தொடங்கினர்.28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை.