ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் கொரோனாவை விட 'நிபா' வைரசால் இறப்பு விகிதம் மிக அதிகம்: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

கொரோனாவை விட ‘நிபா’ வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-15 22:15 GMT

புதுடெல்லி,

கேரளாவில் 'நிபா' வைரஸ் என்ற கொடிய நோய் பரவி வருகிறது. நேற்று ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 6 ஆக உயர்ந்தது. அவர்களில் 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இதனால், கேரள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் உயரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜீவ் பாஹல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால்தான் மற்றவர்களுக்கும் நிபா வைரஸ் பரவி உள்ளது.

நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகம். கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. ஆனால், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆகும்.

நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு 'மோனோகுளோனல் ஆன்டிபாடி' என்ற மருந்து அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த மருந்து 14 பேருக்கு கொடுக்கப்பட்டது. அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 'மோனோகுளோனல் ஆன்டிபாடி' மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது, அந்த மருந்து 10 நோயாளிகளுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு இருக்கிறது. இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்யப்போகிறோம். இதை தொற்றின் ஆரம்பகட்டத்தில் அளிக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் இம்மருந்தை கொடுக்கலாம். மருந்தை பயன்படுத்துவது பற்றி கேரள அரசும், நோயாளிகளின் குடும்பத்தினரும்தான் முடிவு செய்ய வேண்டும்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவலுக்கான காரணம் தெரியவில்லை. 2018-ம் ஆண்டு அங்கு பரவியதற்கு வவ்வால்கள் காரணம் என்று கண்டுபிடித்தோம். வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை.

இந்த தடவையும் காரணம் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். மழை பருவத்தில்தான் இந்நோய் பரவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்