'நீட் முறைகேடு விவகாரம்; நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன்' - ராகுல் காந்தி

நீட் முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக மாறுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-09 06:51 GMT

புதுடெல்லி,

2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதியவர்களில் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், தேர்வு முடிவுகள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது எனவும் மராட்டிய மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நரேந்திர மோடி இன்னும் பதவி கூட ஏற்காத நிலையில், நீட் தேர்வில் நடந்துள்ள மோசடி 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.

ஒரே தேர்வு மையத்தில் இருந்து 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளனர். நடைமுறையில் சாத்தியமில்லாத அளவிற்கு பலர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால் வினாத்தாள் கசிவு ஏற்படவில்லை என அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

கல்வி மாபியாவுடன், அரசு இயந்திரமும் கூட்டு சேர்ந்து இயங்கும் இந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டை சமாளிக்க காங்கிரஸ் வலுவான திட்டத்தை வகுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில், ஒரு சட்டத்தை உருவாக்குவதன் மூலம் மாணவர்களை வினாத்தாள் கசிவு பிரச்சினையில் இருந்து விடுவிக்க தீர்மானித்தோம்.

இன்று நான் நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும், நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக மாறுவேன் என்றும் உங்கள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக எழுப்புவேன் என்றும் உறுதியளிக்கிறேன். இந்த நாட்டின் இளைஞர்கள் 'இந்தியா' மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் குரல் ஒடுக்கப்படுவதை 'இந்தியா' அனுமதிக்காது."

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்