நீட் தேர்வு; கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2024-07-25 20:42 IST

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை என்று அழைக்கப்படும் என்.டி.ஏ. நடத்துகிறது. அதன்படி, 2024-25 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.

நாடு முழுவதும் 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு எழுதிய 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேரில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்று தகுதி அடைந்திருந்தனர்.

மேலும் இந்த தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல், 1,563 மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதுதவிர வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து இந்த தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அதனுடன், பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் இதுதொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், 'நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, மாணவர்களின் பெயரை மறைத்து 'டம்மி' வரிசை எண்ணை பயன்படுத்தி வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

ஒரு மாணவர் தன்னுடைய மதிப்பெண் மட்டுமல்லாது, மற்றவர்களும் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும், ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா? என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் தேர்வு முடிவுகளை அப்படி வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) சமீபத்தில் மீண்டும் வெளியிட்டது.

அதன்படி, 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவருடைய மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

நீட் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 67 பேர், 720-க்கு 720 மதிப்பெண் பெற்றனர். தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையானது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. 19-ம் கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்