சுள்ளியா அருகே தாயை பிரிந்த 2 மாத குட்டியானை செத்தது

பிறந்து 2 மாதமே ஆன நிலையில் தாய் யானையை பிரிந்த குட்டியானை பரிதாபமாக செத்தது.

Update: 2023-05-12 18:45 GMT

பெங்களூரு-

பிறந்து 2 மாதமே ஆன நிலையில் தாய் யானையை பிரிந்த குட்டியானை பரிதாபமாக செத்தது.

காட்டுயானை

குடகு மாவட்டம் குஷால் நகர் அருகே துபாரே யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த யானைகள் முகாம் அருகிலேயே காவிரி ஆறு ஓடுகிறது. கர்நாடகத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் துபாரே யானைகள் முகாமும் ஒன்றாகும். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா வனப்பகுதியில் இருந்து 2 குட்டியானைகளுடன் 2 காட்டுயானைகள் வெளியேறின.

அவைகள் சுள்ளியா வனப்பகுதி அருகே துடியடுக்கா, அஜ்ஜாவரா பகுதிகளில் சுற்றித்திரிந்தன. இந்த நிலையில் அஜ்ஜாவரா பகுதியில் காட்டுயானைகள் சுற்றித்திரிந்தபோது அங்குள்ள குளத்தில் தவறி ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன. அவைகளுடன் சேர்ந்து குட்டியானைகளும் குளத்தில் விழுந்தன.

தாயை பிரிந்த குட்டியானை

இந்த சந்தர்ப்பத்தில் அவ்வழியாக வந்த கிராம மக்கள் குளத்தில் இருந்து யானைகள் வெளியே ஏறி வர குளத்தின் கரையில் பள்ளம் ஏற்படுத்தி பாதை அமைத்து கொடுத்தனர். அதன்மூலம் 2 காட்டுயானைகளும், ஒரு குட்டியானையும் குளத்தில் இருந்து ஏறி மேலே வந்தன. ஆனால் ஒரு குட்டி யானையால் வெளியே வரமுடியவில்லை. எவ்வளவோ முயன்றும் மீண்டும், மீண்டும் குட்டியானை குளத்திற்குள்ளேயே விழுந்தது.

இதையடுத்து 2 காட்டுயானைகளும் ஒரு குட்டியானையுடன் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அவைகள் குளத்தில் ஒரு குட்டியானையை தவிக்க விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதனால் குட்டியானை தனது தாயை பிரிந்து பரிதவித்தது. அப்போது கிராம மக்கள் குளத்தில் கயிற்றை வீசி அதன்மூலம் குட்டியானையை மீட்டனர்.

பரிதாபமாக செத்தது

பின்னர் இதுபற்றி அவர்கள் துபாரே யானைகள் முகாமுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த குட்டியானையை மீட்டனர். பின்னர் அதை வனப்பகுதிக்குள் அனுப்பினர். ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற அந்த குட்டியானை தனது தாயை காணாமல் மீண்டும் குளத்தின் அருகே வந்துவிட்டது. அதையடுத்து அந்த குட்டியானையை அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அதை உடனடியாக செய்ய முடியவில்லை. இதனால் அந்த குட்டியானையை துபாரே யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த குட்டியானையை பராமரித்து வந்தனர். மேலும் அதன் தாயையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த குட்டியானை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரிதாபமாக செத்துவிட்டது. தாயை பிரிந்து பரிதவிப்பில் குட்டியானை செத்துவிட்டதாகவும், அந்த குட்டியானை பிறந்து 2 மாதங்களே இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். குட்டியானையின் உடல் துபாரே யானைகள் முகாம் அருகே உள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்