பெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-16 00:48 GMT

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியதோடு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இளைஞரின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், அந்த வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, இளைஞரின் 42 வயதான தாயாரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று, மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, அங்கு 2 கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விளக்கமளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என்றும், சமூகத்தில் எளியவர்களையும், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம், விசாரணையின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட நிவாரணம், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவை குறித்து கர்நாடக மாநில அரசு 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்