இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தலைமையகத்தை திறந்து வைத்த பிரதமர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். அங்கு இன்று காலை நவ்சாரியில் நடைபெற்ற 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். சுமார் ₹ 3,050 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து அவர் அகமதாபாத் சென்றார். அகமதாபாத்தில் உள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைமையகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். தலைமையகத்தை திறந்து வைத்த பின்னர் பிரதமர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.