இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் இலவசங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்- ரிசர்வ் வங்கி உறுப்பினர்
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளார்.;
இலவசங்களுக்கு எதிர்ப்பு
மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை சமீபத்தில் சாடிய பிரதமர் ேமாடி, இலவசங்களை வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணாவது மட்டுமின்றி, பொருளாதார பேரழிவே ஏற்பட வழிவகுப்பதாக குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இலவசங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த வரிசையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயலும் இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
மக்களுக்கு தெரிய வேண்டும்
இலவசங்கள் ஒருபோதும் இலவசமாக வழங்கப்படுவது இல்லை. அதன் தாக்கம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
அரசுகள் இலவசங்களை வழங்கும்போது வேறு வழியில் எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது. ஆனால் இது திறனை வளர்க்கும் பொது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும்.
இலவசங்களால் உற்பத்தி மற்றும் வள ஒதுக்கீடு பாதிக்கிறது.
பஞ்சாப்பில் வழங்கப்படும் இலவச மின்சாரம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி போன்ற பெரிய மறைமுக செலவுகள் ஏற்படுகிறது. இது போன்ற இலவசங்களால் சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் நீர் ஆகியவற்றின் தரம் குறைந்து ஏழைகளை மிகவும் பாதிக்கிறது.
நிதி ஆதாரம்
இலவசங்களை அறிவிக்கும் எதிர்க்கட்சிகள், அவற்றுக்கான நிதி ஆதாரம் குறித்து வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும். உலக அளவில் பொருளாதார தாக்கங்கள் இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி நிலையாக நீடிக்கிறது. இந்த சவாலான காலகட்டத்திலும் எதிர்பார்த்த அளவை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
பெரிய உள்நாட்டு தேவை உலகளாவிய மந்த நிலையை மட்டுப்படுத்தலாம். பொது முடக்கத்தால் தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், விவசாயம் நன்றாக இருக்கிறது இவ்வாறு அசிமா கோயல் தெரிவித்தார்.