இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை... தோல்வியடைந்த முரளிதரன் திடீர் அறிவிப்பு- காங்கிரசில் சலசலப்பு

திருச்சூரில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தினர்.;

Update:2024-06-05 14:49 IST

திருவனந்தபுரம்:

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க. கணக்கை திறந்துள்ளது. திருச்சூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 3,37,652 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான முரளிதரன் 3,28,124 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். சங் பரிவார் சக்திகளுக்கு கேரளாவில் கதவுகளை மாவட்ட காங்கிரஸ் தலைமை திறந்துவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாக சுவர்களில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், முன்னாள் எம்.பி. டி.என்.பிரதாபன் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோஸ் வல்லூர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எதிர்பாராத இந்த தோல்வியால் கடும் அதிர்ச்சி அடைந்த முரளிதரன், இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தடாலடியாக அறிவித்தார்.

"இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால்கூட இவ்வளவு ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டேன். தேர்தலில் போட்டியிடும் மனநிலையை இழந்துவிட்டதால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். பொது வாழ்க்கையில் இருந்தும் சிறிது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். பிரசாரத்தின் போது கட்சித் தலைமையிடமிருந்து எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை" என முரளிதரன் தெரிவித்தார்.

கே.சி.வேணுகோபால், சசி தரூர், பி.கே.குஞ்சாலிகுட்டி போன்ற தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்த விவகாரம் கேரள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ., எம்.பி. என பலமுறை பதவி வகித்த முரளிதரன், கட்சித் தலைமையின் உத்தரவின்படி கடைசி நேரத்தில் வடகரையிலிருந்து திருச்சூர் தொகுதிக்கு மாற வேண்டியிருந்தது. பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளை முறியடிப்பதற்காக, சிட்டிங் எம்.பி. டி.என்.பிரதாபனை களமிறக்காமல் முரளிதரனை திருச்சூரில் போட்டியிடும்படி கட்சி தலைமை கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்