நில முறைகேடு விவகாரம்: சித்தராமையா வழக்கில் இன்று தீர்ப்பு

‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2024-09-23 21:48 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

கர்நாடக மந்திரிசபை கூட்டம் நடத்தப்பட்டு, சித்தராமையாவுக்கு அனுப்பிய நோட்டீசை கவர்னர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மந்திரிசபையின் தீா்மானத்தை நிராகரித்த கவர்னர், கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. முதல் நாளிலேயே, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அந்த தடை தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது.

நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று பகல் 12 மணிக்கு அளிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்