மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

மத்தியபிரதேச மாநிலத்தில் என்.ஐ.ஏ. நடத்திய அதிரடி சோதனையில் எலெக்டிரானிக் சாதனங்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமான பல பொருட்கள் சிக்கின.

Update: 2023-03-12 20:07 GMT

கோப்புப்படம்

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், சியோனியில் 3 பேருக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, ஆட்சேபகரமான பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

2 பேரிடம் விசாரணை

இந்த சோதனையைத் தொடர்ந்து சியோனி போலீஸ் சூப்பிரண்டு ராம்ஜி ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-

டெல்லியில் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின் அடிப்படையில்தான் இங்கு சோதனைகள் நடத்தப்பட்டன.

நேற்று (சனிக்கிழமை) 3 பேருக்கு சொந்தமான இடங்களில் நடந்த இந்த சோதனைக்கு பின்னர் அஜிஸ் சல்பி (வயது 40), சோயிப் கான் (27) என்னும் 2 பேர் விசாரணைக்காக ஜபல்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின்போது எலெக்டிரானிக் சாதனங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், ஆட்சேபகரமான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்று அவர் கூறினார்.

உள்துறை மந்திரி தகவல்

இதையொட்டி மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்துச்சென்ற 2 பேரையும் விசாரணைக்குப் பின்னர் விடுவித்து விட்டனர். அவர்கள் தொடர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நபர்களிடம் இருந்து மொபைல் போன் சிம் கார்டுகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட 26 பொருட்கள் சிக்கி உள்ளன என்று அவர் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையால் சியோனி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்