பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை
பெங்களூருவில் பிரதமர் மோடி வருகையையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் இன்று இரவு பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். இதற்காக இன்று மாலை துமகூருவில் இருந்து பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு அவர் செல்ல உள்ளார். இதையடுத்து, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகை வரை உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை பழைய விமான நிலைய ரோடு, கேம்பிரிட்ஜ் லே-அவுட் ரோடு, இந்திராநகர் 100 அடி ரோடு, அரலிகட்டே ரோடு, ஏ.எஸ்.சி.சென்டர், டிரினிட்டி சர்க்கிள், எம்.ஜி.ரோடு, டிக்கன்சன் ரோடு, மணிபால் சென்டர், கப்பன் ரோடு, பி.ஆர்.வி. ஜங்ஷன், சி.டி.ஓ. ஜங்ஷன், இன்பான்டரி ரோடு, ராஜ்பவன் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று சாலைகளில் செல்வதற்கு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.