மந்திரி சுதாகர் ராஜினாமா செய்ய வேண்டும்

கர்ப்பிணி- 2 சிசுக்கள் பலியான விவகாரத்தில் மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாகவும், மந்திரி பதவியை சுதாகர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-05 20:33 GMT

பெங்களூரு:

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மந்திரி பதவி ராஜினாமா

துமகூருவில் பிரசவம் பார்க்கவும், சிகிச்சை அளிக்கவும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சுகள் நிராகரித்ததால் கர்ப்பிணியும், 2 சிசுக்களும் பலியாகி உள்ளனர். இதுபற்றி கருத்து கூறியதால், எனக்கு எதிராக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளார். அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து கொடூரமான செயலில் டாக்டரும், நர்சுகளும் ஈடுபட்டுள்ளனர்.

3 உயிர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு?. அரசு ஆஸ்பத்திரிக்கு வருவது ஏழை மக்கள். அவர்களுக்கு சிகிச்சை கிடைக்காவிட்டால், அதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சுதாகரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற வேண்டும்.

மற்ற ஆஸ்பத்திரிகளின் நிலை...

அரசு ஆஸ்பத்திரியை ஏழை மக்கள் பலியாகும் கூடமாக மாற்றிய பெருமை மந்திரி சுதாகருக்கு உள்ளது. துமகூரு விவகாரத்தில் நான் எழுப்பிய பிரச்சினைக்கு சரியான பதில் சொல்லாமல், மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார். மந்திரி சுதாகருக்கு மனிதாபிமானம், இரக்கம் இல்லையா?., அப்படி இல்லையென்றால் கர்ப்பிணி, 2 சிசுக்கள் பலியான விவகாரத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடக்கும் போது, அதற்கு சரியான பதிலை கொடுப்பதை நிறுத்திவிட்டு, மாநிலத்தில் இதுபோல், சாவுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள். ஏனெனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியின் நிலைமையே இப்படி இருந்தால், தாலுகா, பிற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. துமகூரு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் தகுதி சுதாகருக்கு இருக்கிறதா?. இல்லையா?.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்