எம்.ஜி. ரோட்டில் போலீஸ் கமிஷனர் ஆய்வு
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து எம்.ஜி. ரோட்டில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆய்வு நடத்தினார். கேமராக்கள், டிரோன்கள் மூலமும் இங்கு வருவோர் கண்காணிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ரோடு:-
புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள்
பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுவது உண்டு. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. எனவே இந்த புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு பப்கள், ரெஸ்டாரெண்ட், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களும், இளைஞர்கள், இளம்பெண்களும் தயாராககி வந்தனர்.
தற்போது உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணிவரை அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக எம்.ஜி.ரோடுவை சுற்றியுள்ள பகுதிகளில் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று எம்.ஜி.ரோட்டில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆய்வு நடத்தினார். நேற்று காலையில் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெருவுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு ஏற்பாடுகள், பாதுகாப்புகள் குறித்து அவர் ஆய்வு நடத்தினார். அவருடன், மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீலும் சென்றிருந்தார். எம்.ஜி.ரோடு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை போலீசாரிடம் கேட்டு, பிரதாப் ரெட்டி அறிந்து கொண்டார்.
பின்னர் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புத்தாண்டுக்கு வருகிற 31-ந் தேதி இரவு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச்தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். எந்த பகுதிகளில் எல்லாமல் அதிகப்படியான போலீசாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து நானே நேரில் வந்து பரிசீலனை நடத்தினேன்.
இந்த ஆண்டு கேமராக்கள் மூலமாகவும், டிரோன்கள் மூலமாகவும் புத்தாண்டுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாது. அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே
பப்கள், மதுபான பார்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு புத்தாண்டு கொண்டாட வரும் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க, அங்கு கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த மண்டலங்களில் இருக்கும் பப், பார்களில் பாதுகாப்பு மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து பரிசீலனை நடத்தும்படி துணைபோலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
எம்.ஜி.ரோடு, அதை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். நள்ளிரவு 1 மணிக்கு பின்பு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட நகரில் எந்த பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது. பார், பப்கள் நள்ளிரவு 1 மணிக்கு கண்டிப்பாக மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.