மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி
மருமகனை தனது அரசியல் வாரிசாக மாயாவதி மீண்டும் அறிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார்.;
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடைய சகோதரர் ஆனந்த குமார். அவரின் மகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக கடந்த டிசம்பர் மாதம் மாயாவதி திடீரென அறிவித்தார். முக்கிய பதவிகளும் அளித்தார்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் 3-வது கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. ஆகாஷ் ஆனந்த் தனது வாரிசு என்ற அறிவிப்பை கடந்த மாதம் 7-ம் தேதி ரத்து செய்தார். ஆகாஷ் ஆனந்த், முழுமையான முதிர்ச்சி பெறும்வரை கட்சியின் நலனுக்காக இம்முடிவை எடுப்பதாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அளவிலான கூட்டம் லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதற்கு மாயாவதி தலைமை தாங்கினார்.
மாயாவதியின் சகோதரர் ஆனந்த குமாரும், அவருடைய மகன் ஆகாஷ் ஆனந்தும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்த பிறகு, மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "ஆகாஷ் ஆனந்த் எனது ஒரே அரசியல் வாரிசாக இருப்பார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார். முன்பு வகித்த பதவிகளில் அவர் நீடிப்பார்.
ஆகாஷ் ஆனந்த், கட்சியின் நலனுக்காக அனைத்து மட்டத்திலும் முழுமையான முதிர்ச்சி பெற்றவராக தலைவராக உருவெடுப்பார் என்று நம்புகிறேன். கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு முன்பை விட அதிக மரியாதையும், கவுரவமும் அளிப்பார்கள். எனவே, எதிர்காலத்தில் என் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன்" என்று மாயாவதி கூறியுள்ளார்.