4 மாநில தேர்தல் முடிவுகள்: "விசித்திரமானது, ஒருதலைப்பட்சமானது" - மாயாவதி சாடல்

புதிரான இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தீவிரமான சிந்தனையும், தீர்வும் தேவைப்படுவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-04 21:35 GMT

கோப்புப்படம்

லக்னோ,

தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்து பார்க்கும்போது, இந்த வினோதமான முடிவுகள், மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைதளத்தில், "சமீபத்திய 4 மாநில தேர்தல் முடிவுகள், அனைவருக்கும் சந்தேகத்தையும், ஆச்சரியத்தையும், கவலையையும் ஏற்படுத்துவது இயற்கை. காரணம் இவை ஒரு தரப்பாகவும், ஒரு கட்சிக்கு சாதகமாகவும் அமைந்துள்ளன. தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்து பார்க்கும்போது, இந்த வினோதமான முடிவுகள், மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கின்றன.

புதிரான இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தீவிரமான சிந்தனையும், தீர்வும் தேவைப்படுகின்றன. மக்களின் நாடித்துடிப்பை உணர்வதில் மோசமான தவறு நடந்திருக்கிறது.

இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கடுமையாக உழைத்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிரான முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைய தேவையில்லை. பாபா சாகேப் அம்பேத்கரிடம் இருந்து ஊக்கம் பெற்று நாம் முன்னோக்கி நகர முயல்வோம்.

4 மாநில தேர்தல் முடிவுகளையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய அளவிலான கூட்டம் வருகிற 10-ந் தேதி லக்னோவில் நடத்தப்படுகிறது. அதில் தற்போதைய கள நிலவரம் குறித்தும், வருகிற மக்களவை தேர்தலுக்கு தயாராகும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும்" என்று அதில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்