மணிப்பூரின் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2023-06-21 10:23 GMT

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மைதேயி சமூகத்தினர் தங்களை பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் இந்த கோரிக்கைக்கு எதிராக கடந்த மே 3ம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி' நடத்தப்பட்டது.

அப்போது பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது, தற்போது தொடர்ந்து 45 தினங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி திரும்பவில்லை. பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. துப்பாக்கி சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் மீதும் நிர்வாகத்தின்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி உள்ளனர். குகி சமூக எம்.எல்.ஏக்கள் மற்றும் மைதேயி சமூக எம்.எல்.ஏக்களுக்கு இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய பாதுகாப்பு படைகளை ஒரே சீராக நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த கடிதத்தில், கரம் ஷியாம் சிங், தோக்சோம் ராதேஷ்யாம் சிங், நிஷிகாந்த் சிங் சபம், குவைரக்பம் ரகுமணி சிங், ப்ரோஜென் சிங், ராபிந்த்ரோ சிங், ராஜன் சிங், கெபி தேவி மற்றும் ராதேஷ்யாம் ஆகிய 9 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்