மணிப்பூரில் ராணுவம் குவிப்பு கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் வெளியேற்றம் மத்திய அதிரடிப்படையினர் விரைவு

மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன.;

Update:2023-05-05 01:30 IST

புதுடெல்லி,

மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. ராணுவம் குவிக்கப்பட்டது. கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அதிரடிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் ஆகும். இவர்களுக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்க பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால், 4 வாரத்துக்குள் மெய்டீஸ் இன மக்களின் எஸ்.டி. அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் சவுரசந்திரபூர் மாவட்டத்தில் டார்பங் பகுதியில் மாணவர் அமைப்பின் பேரணிக்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணி நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன. இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வழிபாட்டுத்தலங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

தமிழர்கள் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையில் மோரோ கிராமத்திலும் வன்முறை மூண்டது. 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன், பழங்குடி இனத்தவர் வாழாத இம்பால் மேற்கு, காக்சிங், தவுபால், ஜிரிபாம், பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற சூரசந்த்பூர், காங்போக்பி, டெங்னவுபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவமும், அசாம் ரைபிள் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து 7 ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் வைக்க கொடி அணிவகுப்புகள் நடத்தப்படுவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "விலை மதிப்பில்லாத உயிர்கள் பறிபோய் உள்ளன. சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது" என கூறினார். அதே நேரத்தில் கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதற்கு மத்தியில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்குடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பழங்குடி இன மாணவர் அமைப்பின் பேரணியைத் தொடர்ந்து மூண்ட கலவர நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு உதவும் வகையில், 5 கம்பெனி அதிரடிப்படையினரை மத்திய அரசு அங்கு அனுப்பி உள்ளது. அவர்கள் விமானம் மூலம் அங்கு விரைந்தனர். அவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் கலவரங்களை அடக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே 15 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்