மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

மணிப்பூரில் பாலம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-06-24 14:45 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடருகிறது. இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது, வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், குகி பழங்குடியினரை இந்திய ராணுவம் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இது முற்றிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கு வருகிற ஜூலை 3-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கடந்த 21-ந்தேதி தெரிவித்தது.

எனினும், இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் அன்று கூறும்போது, மணிப்பூரில் பாதுகாப்பு முகமைகள் களமிறக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை சிறந்த முறையில் செய்து வருகின்றன என்று தெரிவித்தது.

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த 21-ந்தேதி இரவு 7.10 மணியளவில் தித்திம் சாலையில் பவுகாக்சான் இகாய் அவாங் லெய்காய் மற்றும் வாக்த ஆகிய பகுதிகளை அடுத்த பாலம் ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஸ்கார்பியோ ரக நான்கு சக்கர வாகனம் ஒன்றில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்து உள்ளது. அந்த வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால், பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

குண்டுவெடித்ததில், பாலத்தின் மேற்கு பகுதியில் சில இடங்கள் கடுமையாக சேதமடைந்தன. 3 சிறுவர்களுக்கும் லேசான அளவில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்பின்னர், பவுகாக்சான் இகாய் காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணையின்படி, அந்த வாகனம் சுராசந்த்பூர் பகுதியில் இருந்து வந்துள்ளது என தெரிய வந்து உள்ளது.

மணிப்பூரில் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லை பகுதி முழுவதும் ஊடுருவல்காரர்களின் தொடர்பு பெரிய அளவில் உள்ளது என சந்தேகிக்கப்படும் சூழலில், தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டு உள்ளது. வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று கூடியது. இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், வெடிகுண்டு வழக்கு வழக்கானது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்