காதலை ஏற்கமறுத்த கல்லூரி மாணவி; துப்பாக்கியை காட்டிய மிரட்டிய இளைஞன் - தடுக்க வந்த மாணவியின் நண்பன் சுட்டுக்கொலை

துப்பாக்கிகுண்டு பாய்ந்த கல்லூரி மாணவியின் நண்பன் உயிரிழந்தார்.

Update: 2023-02-10 06:51 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 23). இவர் அதேபகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியான மோனிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மோனிகாவை பின் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை மாலை கல்லூரி மாணவி மோனிகா தனது சக நண்பர்களுடன் இந்தூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த ராகுல் தன் காதலை ஏற்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மாணவியை வற்புறுத்தியுள்ளார்.

இதை ஏற்க மறுத்த மாணவி மோனிகா அங்கிருந்து செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அவரை இடைமறித்த ராகுல் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை கண்ட மாணவியின் நண்பனான கல்லூரி மாணவன் சங்கர் (வயது 20) ராகுலை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே ராகுல் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சங்கரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் தலையில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான ராகுலையும், அவரது குடும்பத்தினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்