'சரியாக படிக்கவில்லை' - கல்லூரி மாணவனை அடித்துக்கொன்ற அண்ணன்

சரியாக படிக்கவில்லை என கூறி கல்லூரி மாணவனை அண்ணனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-21 10:12 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ்மோகன் சேனாபதி (21). கல்லூரி மாணவரான இவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜ்மோகனின் அண்ணன் பிஸ்வாமோகன் (வயது 25). இவர் எம்.பி.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இதனிடையே, கல்லூரி மாணவரான ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனை அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார். இதனால், அவ்வப்போது அண்ணன் - தம்பி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என கூறி நேற்று இரவு பிஸ்வா மோகன் அவரது தம்பி ராஜ்மோகனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜ்மோகனை அண்ணன் பிஸ்வா மோகன் கடுமையாக தாக்கினார். இதில், ராஜ்மோகன் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ராஜ்மோகனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ராஜ்மோகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் பிஸ்வா மோகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்