நிலுவை நிதியை வழங்கவில்லை - மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா

நிலுவை நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2024-02-03 05:48 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசுடன் மோதல் போக்கு கொண்டுள்ள மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியில் இணைந்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்த மம்தா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனிடையே, மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய பல கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன் மேடை அமைத்து மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நலத்திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை உடனடியாக வழங்கக்கோரி மம்தா பானர்ஜி நடத்தும் தர்ணா போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. தர்ணா நடைபெற்று வரும் இடத்திலேயே நேற்று இரவு மம்தா பானர்ஜி தங்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசை கண்டித்து மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்