வங்காளதேச அகதிகளுக்கு மே.வங்காளத்தில் பாதுகாப்பு அளிக்கப்படும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.;
கொல்கத்தா,
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.அதே போல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாநிலத்தின் அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைத்ததை தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமடைந்தது.
அதேபோல் தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு தற்போது வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வங்காள தேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்காளத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கும் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, வங்காளதேசத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்து நான் பேசப் போவதில்லை, அது வங்காளதேசத்தின் உள்நாட்டுப் பிரச்னை. ஆனால், ஆதரவின்றி சிரமப்படும் மக்கள் எவரானாலும், மேற்குவங்காளத்தின் கதவுகளைத் தட்டும்போது, அவர்களுக்கு கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். ஐ.நா. வழிகாட்டுதல்களின்படி வங்காளதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு எங்கள் மாநிலத்தில் தஞ்சம் அடையும் அனைத்து அகதிகளையும் நாங்கள் வரவேற்போம்" என்று அவர் கூறினார்.
மேலும், மேற்கு வங்காளத்தில் பதற்றம் மற்றும் பிரச்சனையைத் தூண்டக்கூடிய வன்முறைகள் குறித்த வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும் வங்காள மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.