ஊட்டச்சத்து குறைபாடு... ஆண்டுதோறும் இந்தியாவில் 17 லட்சம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் வாழும் 70% பேருக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை என்று அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.;

Update:2022-06-11 14:45 IST



புதுடெல்லி,



உலக அளவில் சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எனினும், சீனாவுடன் ஒப்பிடும்போது மிக குறைந்த நில பரப்பளவே இந்தியா கொண்டுள்ளது.

இந்நிலையில், போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்காமல் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

ஆரோக்கிய உணவு என்று வரும்போது, அதிக அளவில் உணவு அல்லது குளிர்பானம் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும் என்பது அர்த்தமல்ல. நல்ல சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட வயது வந்த இளைஞர், இளைஞிகள் நாளொன்றுக்கு 35.8 கிராம் அளவே பழங்களை எடுத்து கொள்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு 200 கிராம் பழங்களை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இதேபோன்று குறைந்தபட்சம் தினசரி 300 கிராம் அளவுள்ள காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், பிடித்தும், பிடிக்காமலோ அல்லது கிடைக்காமலோ உள்ளிட்ட வேறு சில காரணங்களால் 168.7 கிராம் அளவுள்ள காய்கறிகளையே எடுத்து கொள்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு பருப்பு வகைகளை 24.9 கிராம் அளவுக்கே (தினசரி இலக்கில் 25 சதவீதம்) அவர்கள் எடுத்து கொள்கின்றனர். தினமும் 3.2 கிராம் அளவு கடலைகள் (தினசரி இலக்கில் 13 சதவீதம்) உணவாக உட்கொள்கின்றனர் என தெரிவிக்கிறது.




ஓர் ஆரோக்கிய உணவானது, ஒரு நபர் ஈட்டும் வருவாயில் இருந்து 63 சதவீதம் அதிகரிக்கும்போது, அது கிடைத்தற்கரிய ஒன்றாகி விடுகிறது என உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவிக்கின்றது.

நாட்டில் சில வளர்ச்சி நிலை எட்டப்பட்டபோதும், உணவுகள் ஆரோக்கியமுடன் இருப்பதில்லை. நாட்டில் தொடர்ந்து ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை காணப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஊட்டச்சத்து உணவு என்பது ஒருபுறம் இருந்தபோதும், நாட்டில் உணவு கிடைக்காமல் பசி, பட்டினியால் வாடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமுள்ளது. இதிலும், உணவை வீணாக குப்பையில் கொட்டும் அவலமும் இந்தியாவில் காணப்படுகிறது.





உணவு வீணாகுதல் குறியீட்டு அறிக்கையின்படி 2019ம் ஆண்டில் மட்டும் 931 மில்லியன் டன் உணவு பொருட்கள் குப்பையில் கொட்டப்பட்டிருக்கின்றன. இது நமக்கும் கிடைக்கும் உணவில் 17 சதவீதம் ஆகும். ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு நபர் 121 கிலோ உணவை வீணாக குப்பையில் கொண்டு சேர்க்கிறார் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், இந்திய வீடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 50 கிலோ உணவு வீணாக்கப்படுகிறது என்ற தகவலும் அதிர்ச்சி அளிக்கிறது.

சரி ஊட்டச்சத்து உள்ள ஆரோக்கிய உணவு பற்றி வருவோம். பெருமளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை எடுத்து கொள்வது குறைந்து காணப்படுகிறது என அறிக்கை தெரிவிக்கின்றது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்களே அதிக அளவில் எடுத்து கொள்ளப்படும் நிலை காணப்படுகிறது.


 





இந்தியர்களில் 71 சதவீதம் பேருக்கு போதிய ஊட்டச்சத்து உணவு கிடைப்பதில்லை. இதில், சர்வதேச சராசரி 42 சதவீதம் ஆக உள்ளது என 2021ம் ஆண்டுக்கான சர்வதேச ஊட்டச்சத்து அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கடந்த ஆண்டில் நுகர்வோர் உணவு விலை குறியீட்டின் பணவீக்கம் 327 சதவீதம் அதிகரித்து இருந்தது. அதேவேளையில், நுகர்வோர் உணவு விலை குறியீடு உள்ளிட்ட நுகர்வோர் விலை குறியீடு 84 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து இருந்தது என அறிக்கை தெரிவிக்கிறது.

நுகர்வோர் விலை குறியீடு பணவீக்கத்தில், மற்றவற்றை விட உணவு பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. அதிக அளவிலான உணவு பணவீக்கத்திற்கு உற்பத்திக்கான விலை அதிகரிப்பு, சர்வதேச அளவில் பயிர்களின் விலை உயர்வு மற்றும் பருவகாலம் சார்ந்த தீவிர இடையூறுகள் ஆகியவை காரணங்களாக உள்ளன.

கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் உணவு விலை விகிதம் அதிகரித்து இருந்தது என ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்