பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா? - மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பிரதமர் மோடி என்ன கடவுளா? அவர் சபைக்கு வந்தால் என்ன ஆகிவிடும்? என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே கேட்டார்.;

Update:2023-08-11 04:33 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியவுடன், வழக்கமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண் 167 மற்றும் 168-ன்கீழ் விவாதிக்க 3 நோட்டீஸ்கள் வந்திருப்பதாக கூறினார்.

167-வது விதி, பிரதமர் முன்னிலையில் விவாதம் நடத்துவதை குறிக்கிறது. 167-வது விதியின்கீழ், பிரதமர் முன்னிலையில் விவாதம் நடத்த அனுமதிக்குமாறு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கரிடம் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.

கடவுள் அல்ல

அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, கோபம் அடைந்த கார்கே, ''பிரதமர், சபைக்கு வந்தால் என்ன ஆகிவிடும்? அவர் என்ன பரமாத்மாவா? அவர் கடவுள் அல்ல'' என்று கூறினார்.

இதையடுத்து, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

பின்னர், ஜெகதீப் தன்கர் பேசுகையில், ''கடந்த ஜூலை 31-ந்தேதியே விவாதத்தை தொடங்கினோம். எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை. 167-வது விதியின்கீழ் விவாதம் நடத்துவது பற்றி இருதரப்பு தலைவர்களிடமும் கருத்து கேட்டு முடிவு எடுப்பேன்'' என்று கூறினார்.

ஒத்திவைப்பு

மத்திய மந்திரி பியூஷ் கோயல், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். கார்கே, 167-வது விதியின்கீழ் விவாதம் நடத்துமாறு வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து எழுந்த அமளியால், சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, புதிய விதியின்கீழ் விவாதம் நடத்துவதில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சபைத்தலைவர் முயன்றார். அப்போது, இருதரப்பும் கவிதைகளை மேற்கோள் காட்டி விமர்சித்து கொண்டனர்.

இதற்கிடையே, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.பி. எழுந்து, ''நான் உள்ளிட்ட பழங்குடியினர், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் வசித்து வருகிறோம். நாங்கள் மியான்மரில் இருந்து வரவில்லை'' என்று கூறினார்.

சபைத்தலைவர் அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை. அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதா நிறைவேறியது

அமளிக்கிடையே, மருந்தக திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, தகுதியானவர்கள், மருந்தக சட்டத்தின்கீழ் மருந்தாளுனர்களாக பதிவு செய்து கொள்ள வழிவகுக்கிறது.

பின்னர், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் மந்திரியை சேர்ப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதைத்தொடர்ந்து, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்