தலையை துண்டித்து விடுவதாக மிரட்டல்..! பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி மீது பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு புகார்!

பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ நிர்வாகியிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-08 12:16 GMT

மும்பை,

மராட்டிய மாநில பாஜக எம்எல்ஏ விஜய் குமார் தேஷ்முக்கிற்கு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை மிரட்டல் தொடர்பாக, எம்எல்ஏ விஜய் குமார் தேஷ்முக், பிஎப்ஐ தலைவர் முகமது ஷபி பிராஜ்தர் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்த மிரட்டல் கடிதத்தில், அயோத்தி கோவில், மதுரா கோவில் போன்ற முக்கிய இந்துக் கோவில்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் ரேடாரில் இருப்பதாகவும் பி.எப்.ஐ உறுப்பினர் மிரட்டியதாக போலீசிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து சோலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடிசோதனை நடத்தியது.

இந்த சோதனையில், பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, பி.எப்.ஐ மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்