பணக்கார 'பேச்சுலர்', ஆடம்பர கார்கள், மாதம் ரூ. 6 லட்சம் சம்பளம்... மெட்ரிமோனி தளத்தில் இளம்பெண்களிடம் மோசடி செய்த விஷால்...!

பல்வேறு ஆடம்பர கார்களை ஒருநாளைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கில் 15 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

Update: 2023-04-15 14:20 GMT

டெல்லி,

பணக்கார பேச்சுலர் என ஆன்லைன் திருமணம் தகவல் மையமான மெட்ரிமோனி தளத்தில் பதிவிட்டு இளம்பெண்களை வலையில் சிக்கவைத்து லட்ச கணக்கில் மோசடி செய்த இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் விஷால். இவர் ஆன்லைன் திருமண தகவல் மையமான மெட்ரிமோனி தளத்தில் தான் பணக்கார பேச்சுலர் எனவும் தனக்கு ஏற்ற மணப்பெண் தேவை என்றும் பதிவிட்டுள்ளார். இளம்பெண்களை கவர தனது புகைப்படத்துடன் சேர்த்து தனக்கு சொந்தமான கார், வீடு என கூறி சொகுசு கார்கள், ஆடம்பர வீடுகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அவ்வாறு மெட்ரிமோனி தளத்தில் நட்பாகும் இளம்பெண்களிடம் பேசி குறைந்த விலையில் ஐபோன் வாங்கித்தருவதாக கூறி அவர்களிடமிருந்து பணத்தை பறித்துள்ளார்.

விஷால் நன்கு படித்த பெரும் கார்பரேட் நிறுவனத்தில் வேலைபார்த்த நபராவார். நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு தனியாக தொழில்தொடங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அந்த நஷ்டமான பணத்தை மீட்க மெட்ரிமோனி ஆன்லைன் இணையதளம் மூலம் இளம்பெண்களை குறிவைத்து மோசடி செய்துள்ளார்.

அவ்வாறு ஒரு இளம்பெண்ணை இதேபாணியில் மோசடி செய்ய முயற்சித்தபோது விஷால் போலீசில் சிக்கியுள்ளார். டெல்லி குருகிராமில் உள்ள பெருநிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய தீர்மானித்த அவரது பெற்றோர் மெட்ரிமோனி தளத்தில் பதிவு செய்து மணமகன் தேடியுள்ளனர்.

அப்போது, விஷால் தான் பெருநிறுவனத்தில் எச்.ஆர். ஆக பணியாற்றுவதாகவும், ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் முதல் 70 லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் அந்த பெண்ணின் புரோபைலுக்கு நோட்டிபிகேஷன் சென்றுள்ளது. விஷாலின் சம்பளம், ஆடம்பர கார், வீடு உள்ளிட்டவற்றை பார்த்த அந்த இளம்பெண் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

நாளடைவில் இருவரும் செல்போனில் நன்கு பேசியுள்ளனர். விஷால் தன்னிடம் உள்ள கார்கள், வீட்டின் புகைப்படத்தை அந்த பெண்ணுக்கு செல்போனில் போட்டோ எடுத்து அனுப்பி வைத்துள்ளார். பணம், வீடு, கார் என விஷாலின் அடுக்கடுக்கான பேச்சால் மயங்கிய அந்த இளம்பெண் அவருடன் நன்கு பழகியுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்ற விஷால் குறைவான விலையில் ஐபோன் வாங்கித்தருவதாக அந்த பெண்ணை நம்பவைத்துள்ளார். உறவினர்களுக்கும் ஐபோன் வாங்கித்தருவதாக விஷால் கூறியுள்ளார். விஷாலின் பேச்சை நம்பிய அந்த பெண் 8 தவணையாக ஆன்லைன் மூலம் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.

3 லட்ச ரூபாய் பணத்தை பெற்ற உடன் தான் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், ஜெய்ப்பூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணிடம் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகவலைதளத்தில் இருந்து அந்த பெண்ணுடனான தொடர்பை விஷால் துண்டித்துள்ளார். அந்த பெண்ணின் கணக்கை விஷால் பிளாக் செய்துள்ளார். மேலும், அந்த பெண் செல்போன் மூலம் தொடர்புகொண்டபோதும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து உடனடியாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலியாக வெறொரு பெண் பெயரில் அதே மெட்ரிமோனி தளத்தில் கணக்கை தொடங்கி விஷாலிடம் பேசியுள்ளார்.

அந்த போலி கணக்கில் பெண் போல பேசுவது போலீஸ் என்பதை அறியாத விஷால் தொடர்ந்து அவரிடம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் ஐபோன் வாங்க பணம் அனுப்பும்படி விஷால் கேட்க பணம் தருவது போல் அழைத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட விஷாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஷால் குருகிராமில் உள்ள பெருநிறுவனத்தில் எச்.ஆர்.ஆக பணியாற்றியதும் பின்னர் வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கியதும் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இவ்வாறு ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து அதை வைத்து பெண்களை வசியம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. சொகுசு கார்களை 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளார். வாடகைக்கு எடுத்த காரை விதவிதமாக போட்டோ எடுத்து அது தன் கார் என பெண்களிடம் கூறி ஏமாற்றி தன்னை பெரும் பணக்கார பேச்சுலர் என விஷால் நம்பவைத்துள்ளார். பின்னர் தன் வலையில் சிக்கும் பெண்களிடம் இருந்து விஷால் பணத்தை சுருட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கில்லாடி விஷால் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்