5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்: இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்தி வைப்பு

பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை 20-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-03-17 06:15 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16ம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இருஅவைகளும் வரும் திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக வெளியான 'ஹிண்டன்பர்க்' அறிக்கையை தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி வருகின்றன. தொடர்ந்து 5-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின.

Tags:    

மேலும் செய்திகள்