உள்ளாட்சி தேர்தல் வன்முறை: மேற்குவங்க கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறப்பு

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-19 00:20 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தலையொட்டி அங்கு தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கலின்போது நடந்த வன்முறைகளில் 7 பேர் பலியாகினர்.

இதை தொடர்ந்து மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கடந்த சனிக்கிழமை வன்முறை பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் அரசியல் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் வன்முறை தொடர்பாக பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வன்முறை பாதித்த பகுதிகளை கவர்னர் நேரில் பார்வையிட்டபோது குற்றநடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்ததை கருத்தில் கொண்டு இந்த அமைதி திறக்கப்பட்டுள்ளது. இந்த அறை பொதுமக்களின் பிரச்சினைகளை அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம் தகுந்த நடவடிக்கைக்கு அனுப்பும்" என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்