மதுபான ஊழல் வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரி மகளிடம் சி.பி.ஐ.7 மணி நேரம் விசாரணை

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Update: 2022-12-12 00:42 GMT

ஐதராபாத்,

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி, தனியார் மதுபானக்கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் அளித்ததில் பெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இது டெல்லி அரசியல் அரங்கைக் கலக்கி வருகிறது. இதில் துணை முதல்-மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க.வை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. இந்த மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு (வயது 44) தொடர்பு உள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டுகளை அப்போது கவிதா மறுத்தார். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த 'ரிமாண்ட் ரிப்போர்ட்'டில் (காவல் அறிக்கை) கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்தக் காவல் அறிக்கையில், "இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சித்தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 11-ந் தேதி (நேற்று) அவரது வீட்டுக்கு நேரில் வருவார்கள் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று வந்தனர். அவர்கள் கவிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களைப் பெற்று அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. மாலை 6.30 மணிக்கு விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டனர். இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்