மதுபான ஊழல் வழக்கு: தெலுங்கான முதல்-மந்திரி மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தெலுங்கான முதல்-மந்திரி மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2023-03-08 17:54 GMT

புதுடெல்லி,

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி, தனியார் மதுபானக்கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் அளித்ததில் பெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இது டெல்லி அரசியல் அரங்கைக் கலக்கி வருகிறது. இதில் துணை முதல்-மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ஜ.க.வை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. இந்த மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு (வயது 44) தொடர்பு உள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் கடந்த ஆகஸ்டு மாதம் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டுகளை அப்போது கவிதா மறுத்தார். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த 'ரிமாண்ட் ரிப்போர்ட்'டில் (காவல் அறிக்கை) கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக வரும் மார்ச் 9 (வியாழக்கிழமை) நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க கோரி கவிதாவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்த ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்