எங்கள் அரசை கவிழ்க்க நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்; மந்திரி செலுவராயசாமி ஆவேசம்

எங்கள் அரசை கவிழ்க்க நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-30 20:18 GMT

பெங்களூரு:

கர்நாடக விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது;-

காங்கிரஸ் அரசு கூடிய விரைவில் கவிழும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் குமாரசாமியுடன் செல்வதில்லை. இதற்கு முன்பு பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தனர். அதனால் ஆபரேசன் தாமரை நடத்தி அரசு அமைத்திருந்தனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் 135 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது.

எங்களது அரசை அவ்வளவு எளிதாக கவிழ்த்து விட முடியாது என்பதை முதலில் குமாரசாமி அறிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவுடன் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்திருப்பதால், எத்தனை பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது குமாரசாமிக்கு தெரியுமா?. முதலில் குமாரசாமி தங்களது கட்சியில் இருப்பவர்களை சமாதானப்படுத்தும் வேலையை செய்யட்டும்.

அதன்பிறகு, காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியில் குமாரசாமி ஈடுபடட்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள். காங்கிரஸ் அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சிகளை நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். முதலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த பலருக்கு விருப்பம் இல்லை. பா.ஜனதாவினரும் அதே நிலையில் தான் இருக்கின்றனர்.

தங்களது கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு கவிழும் என்று குமாரசாமி சொல்லி இருப்பார். குமாரசாமி எப்போதும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் முதல்-மந்திரி ஆவேன் என்று சொல்வதே இல்லை. அதே நேரத்தில் மற்றொருவர் முதல்-மந்திரியாக இருப்பதும் குமாரசாமிக்கு பிடிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்