பெங்களூருவில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

பெங்களூருவில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2022-12-30 18:45 GMT

பனசங்கரி:

பெங்களூரு கெங்கேரி, கும்பலகோடு பகுதியையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 சிறுத்தைகள் வெளியேறி நகரில் புகுந்து சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியானது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

பெங்களூரு நகரில் சுற்றித்திரியும் 4 சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனாலும், சிறுத்தைகள் சிக்காமல் வனத்துறையினரிடம் போக்கு காட்டி வந்தது. சிறுத்தைகள் பிடிபடாததால் அதனை தேடும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பனசங்கரி நைஸ் ரோடு அருகே துரஹள்ளி பகுதியை சுற்றி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, அந்தப்பகுதியை சேர்ந்த நாகண்ணா என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை வேட்டையாடி கொன்று தப்பி சென்றது.

மேலும் நைஸ் ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்துள்ளனர். பெங்களூருவில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்