தேர்தலில் பொய்களை கூறி வாக்குகள் பெற்ற காங்கிரஸ்; குமாரசாமி குற்றச்சாட்டு

தேர்தலில் பொய்களை கூறி காங்கிரஸ் வாக்குகளை பெற்றதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-06-06 19:53 GMT

பெங்களூரு:

தேர்தலில் பொய்களை கூறி காங்கிரஸ் வாக்குகளை பெற்றதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையாவுக்கு தெரியும்

இலவச மின்சார திட்டத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்புவதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிடுவதாகவும் கூறியுள்ளார். இது சரியல்ல. இந்த விவகாரத்திற்கு காரணமே சித்தராமையா தான். மாநில மக்களுக்கு உத்தரவாத அட்டையில் காங்கிரஸ் தலைவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர்.

தேர்தலில் பொய்களை கூறி காங்கிரஸ் ஓட்டுகளை பெற்றுள்ளது. இப்போது தான் இந்த இலவச திட்டங்களின் சாதக-பாதகங்கள் நினைவுக்கு வருகிறது. இதுகுறித்து முன்பே யோசிக்கவில்லையா?. இப்போது நிபந்தனைகளை விதிக்கிறார்கள். காங்கிரசாருக்கு மனசாட்சி என்பது இருக்கிறதா?. முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அனைத்தும் தெரியும்.

அனைவருக்கும் இலவசம்

ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 14-வது முறையாக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார். மாநிலத்தின் நிதிநிலை குறித்து அவரை விட நன்கு தெரிந்த ஞானிகள் வேறு யார் உள்ளனர்?. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளை சித்தராமையா குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் இலவசம் என்று சொன்னார்கள். அரசின் மக்கள் விரோத முடிவுகளை ஆதரிப்பது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துவது தான் எங்களின் வேலை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் அந்த மக்களின் நிலை என்ன?.

போராட தயார்

மக்கள் கஷ்டப்படும்போது, அதற்காக நாங்கள் போராட தயாராக உள்ளோம். நாங்கள் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார முடியாது. மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். பா.ஜனதா ஆட்சியில் தான் மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கொடுத்துவிட்டு தெருவுக்கு வந்து பா.ஜனதாவினர் நாடகமாடுகிறார்கள். காங்கிரசார் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் நான் பொறுமையாக இருக்கிறேன். மேகதாது, மகதாயி திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில் அரசு எடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிப்போம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்