ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரம்; குமாரசாமி- எச்.டி.ரேவண்ணா சமரசம்

ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் சகோதரர்கள் குமாரசாமி-எச்.டி.ரேவண்ணா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக சொரூப்பை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-03-08 18:45 GMT

பெங்களூரு:

ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் சகோதரர்கள் குமாரசாமி-எச்.டி.ரேவண்ணா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக சொரூப்பை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

93 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவா்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஹாசன் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாக எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி தன்னிச்சையாக அறிவித்தார்.

குமாரசாமி திட்டவட்டம்

அதைத்தொடர்ந்து அவர் அந்த தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். இதை நிராகரித்துவிட்ட குமாரசாமி, ஹாசன் தொகுதியில் கட்சியின் சாமானிய தொண்டர் ஒருவருக்கு தான் டிக்கெட் வழங்கப்படும் என்றும், பவானிக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

ஆனாலும், பவானி மற்றும் அவரது கணவர் ரேவண்ணா ஆகியோர் ஹாசன் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்வதை நிறுத்தவில்லை.

மோதல் போக்கு

இதனால் ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் சகோதரர்கள் குமாரசாமிக்கும், ரேவண்ணாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதுபற்றி கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்த அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, ஹாசன் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையை ஒத்திவைக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

சமரசம்

இந்த நிலையில் குமாரசாமியும், ரேவண்ணாவும் பெங்களூருவில் ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாகவும், இதில் ஹாசன் தொகுதியை கட்சி தொண்டர் ஒருவருக்கு விட்டுக்கொடுக்க சம்மதித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருவருக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக தேவேகவுடாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஹாசன் தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் அந்த தொகுதி வேட்பாளராக சொரூப்பை அறிவிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தேவேகவுடா குடும்பத்தில் சகோதரர்கள் இடையே நிலவி வரும் மோதல் போக்கு சுமுகமாக முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்