"இந்திரா காந்தி காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை" - பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கருத்து

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்துவந்த குல்தீப் பிஷ்னாய் இன்று பாஜகவில் இணைந்தார்.

Update: 2022-08-04 10:49 GMT

புதுடெல்லி,

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்துவந்த குல்தீப் பிஷ்னாய் இன்று பாஜகவில் இணைந்தார்.

நான்கு முறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை எம்.பி.யாகவும் இருந்த பிஷ்னோய், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) வாக்களித்ததற்காக ஜூன் மாதம் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் காங்கிரஸால் நீக்கப்பட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "என் விஷயத்தில், நான் என் ஆன்மாவைக் கேட்டு, என் ஒழுக்கத்தின்படி செயல்பட்டேன்" என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில் அவர் நேற்று அரியானா சட்டசபையில் இருந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் பிஷ்னோய் மற்றும் அவரது மனைவி ரேணுகா பிஷ்னோய் ஆகியோர் பாஜகவில் இன்று சேர்ந்தனர். டெல்லியில் பாஜகவில் இணைந்த பிறகு, பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் அவர் சந்தித்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு, குல்தீப் பிஷ்னோய், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். அவர் கூறியதாவது, "எப்போதும் நாட்டைப் பற்றியும் ஏழைகளின் நலனைப் பற்றியும் சிந்திக்கும் "சிறந்த" இந்தியப் பிரதமர் மோடி" என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், தான் நீண்டகாலமாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

"நான் நீண்ட நாட்களாக பாஜகவில் சேர விரும்பினேன். நான் நீண்ட காலமாக காங்கிரஸ்காரனாக இருந்ததால் அவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன்.

அவர்களுக்கு (காங்கிரஸ் கட்சிக்கு) நான் சிலவற்றை பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்திரா காந்தி ஜி, ராஜீவ் காந்தி ஜி ஆகியோரின் காங்கிரஸ், அவர்களின் சித்தாந்தம் அதிலிருந்து இப்போதைய கட்சி முற்றிலும் வழிதவறிவிட்டது.

காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அந்த சித்தாந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் சுய அழிவு நிலையில் இருந்தால் என்ன செய்ய முடியும்?" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்