மகனை கொன்று, தொழிலாளி தற்கொலை
பல்லாரியில் விபத்தில் மனைவி உயிர் இழந்ததால் மகனை கொன்றுவிட்டு, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. விளையாட சென்றதால் மற்றொரு மகன் உயிர் தப்பினான்.
பல்லாரி-
விபத்தில் மனைவி சாவு
பல்லாரி மாவட்டம் கோலேகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈடிகேர் யங்கப்பா(வயது 32). இவருக்கு நந்தீஷ் என்ற மகனும், 5 வயதில் விஜய் பிரசாத் என்ற மகனும் இருந்தார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி ஈடிகேரின் மனைவி சென்ற ஆட்டோ கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈடிகேரின் மனைவி உயிர் இழந்தார். மனைவி இறந்த பின்பு கூலி வேலை செய்து தனது 2 மகன்களையும் ஈடிகேர் வளர்த்து வந்துள்ளார்.
ஆனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ஈடிகேர் கடந்த மாதம்(அக்டோபர்) தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஈடிகேரின் மூத்த மகன் நந்தீஷ் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தான். அப்போது சிறுவன் விஜய் பிரசாத் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
மகனை கொன்று தொழிலாளி தற்கொலை
அந்த சந்தர்ப்பத்தில் தனது மகன் விஜய் பிரசாத்தின் கழுத்தை நெரித்து ஈடிகேர் கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டின் ஒரு அறையில் ஈடிகேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பல்லாரி புறநகர் போலீசார் விரைந்து வந்து தந்தை, மகனின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது மனைவி இறந்த துக்கத்தாலும், அதன்பிறகு குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வந்ததாலும், மகனை கொன்று விட்டு ஈடிகேர் தற்கொலை செய்தது தெரிந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் மூத்த மகன் நந்தீஷ் விளையாட சென்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான் என்றும், இல்லையெனில் நந்தீசும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து பல்லாரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.