காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவாலுடன் தொலைபேசியில் பேச்சு

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.;

Update:2023-04-16 02:34 IST

எதிர்க்கட்சி கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணிகளை பல்வேறு தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முக்கிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். அந்தவகையில் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், சரத்பவார் ஆகியோருடன் சமீபத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அடுத்த சில நாட்களில் அவர் ஆலோசனை கூட்டம் ஒன்றையும் நடத்த உள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்

இந்த நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

மேலும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், அவருக்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கவனம் ஈர்ப்பு

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி அணியில் இணைவதற்கு ஆம் ஆத்மி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சி கூட்டங்களில் ஆம் ஆத்மியும் கலந்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக கெஜ்ரிவலுடன், கார்கே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்