பெண் உடை பற்றி சர்ச்சை கருத்து கூறிய கேரள நீதிபதியின் இடமாற்றம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

பெண் உடை பற்றி சர்ச்சை கருத்து கூறிய கேரள நீதிபதியின் இடமாற்றத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-11-02 19:47 GMT

கோப்புப்படம்

கொச்சி,

கேரளாவில் ஒருவர் மீதான பாலியல் தொல்லை வழக்கில் கோழிக்கோடு மாவட்ட நீதிபதியாக இருந்த கிருஷ்ணகுமார் ஜாமீன் வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், அவர் வழக்கு தொடுத்துள்ள பெண், இச்சையைத் தூண்டும் வகையில் உடை அணிந்திருப்பது தெளிவாக தெரிகிறது என கருத்து தெரிவித்திருந்தார். அது பெருத்த சர்ச்சைக்கு வழிவகுத்தது. உடனடியாக நீதிபதி கிருஷ்ணகுமார், கொல்லம் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த இடமாற்றத்தை எதிர்த்து அவர் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், முகமது நியாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த இடமாற்ற உத்தரவு, இயல்பில் தண்டனை போன்றது, நியாயமற்றது என்று நீதிபதிகள் கூறினர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, "இது அவருக்கு பாரபட்சம் மற்றும் களங்கமாக அமையும் என்பதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள நீதித்துறை அதிகாரிகளின் மன உறுதியின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்" என தெரிவித்தனர்.

அதே நேரத்தில், அவர் பிறப்பித்த ஜாமீன் உத்தரவில் கூறி இருந்த வார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துவதாகும், விரும்பத்தக்கதல்ல என்றும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்