கேரள முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் கைது - அமலாக்கதுறை நடவடிக்கை

கேரளாவில் ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற புகாரின் பேரில் முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை மத்திய அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2023-02-16 00:24 GMT

திருவனந்தபுரம்,


கேரளாவில் முதல்-மந்திரி பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர். அந்த சமயத்தில், அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் முதன்மை செயலாளரான சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து சிவசங்கர் கடந்த மாதம் 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஏற்கனவே தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த சுவப்னா சுரேஷ், சிவசங்கர் மற்றும் இவர்களின் தணிக்கை அதிகாரி ஆகியோரின் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது ரூ.1 கோடி மீட்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் லைப் மிஷன் திட்டத்தின் மூலமாக சிவசங்கருக்கு கிடைத்த லஞ்சம் என சுவப்னா சுரேஷ் அதிகாரிகளிடம் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கும் லைப் மிஷன் திட்டத்தில் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக அமலாக்க துறையினர் கடந்த 3 நாட்களாக கொச்சியில் சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரை அமலாக்க துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நேற்று எர்ணாகுளம் முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதைதொடர்ந்து சிவசங்கரை விசாரணைக்காக 5 நாட்கள் அமலாக்க துறை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்