கர்நாடகம் முழுவதும் இன்று முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரி கர்நாடகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

Update: 2023-02-28 21:14 GMT

பழைய ஓய்வூதிய திட்டம்

கர்நாடக அரசு துறைகளில் சுமார் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் 7-வது ஊதிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் பெற வேண்டும் என்று கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கை பெறப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த நிலையில் மாநில அரசு ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் பெறாவிட்டால் மார்ச் மாதம் 1-ந் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஷடக்சரி ஏற்கனவே அறிவித்தார். ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்து வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்த நிலையில் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி தலைமையில் குழுவினர் பெங்களூரு விதான சவுதாவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை செயலாளர், உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளதாகவும், அதனால் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள், 7-வது ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கையை உடனே பெற்று அதை அமல்படுத்த உறுதியளிக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு தலைமை செயலாளரிடம் இருந்து சரியான பதில் வராததால், திட்டமிட்டப்படி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நாளை (அதாவது இன்று) முதல் தொடங்கும் சங்க மாநில தலைவர் ஷடக்சரி அறிவித்தார். இதன் மூலம் தலைமை செயலாளர்-அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அவசர சிகிச்சைகள்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து, மருத்துவ துறை, வருவாய்த் துறை, கல்வித்துறை உள்பட அனைத்துத்துறை ஊழியர்களும் கலந்து கொள்கிறார்கள். இதனால் விதான சவுதா (சட்டசபை அலுவலகம்), மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போல் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அறுவை சிகிச்சைகள், அவசர சிகிச்சைகள், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். நீதித்துறை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நீதிமன்ற பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருப்பதால், இந்த விஷயத்தில் அரசு விரைவாக முடிவு எடுக்காவிட்டால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி கூறியதாவது:-

கவலைப்பட மாட்டோம்

தலைமை செயலாளர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு அரசு தரப்பிடம் இருந்து உறுதிமொழி கிடைக்கவில்லை. தலைமை செயலாளர், அரசுக்கு காலஅவகாசம் வேண்டும் என்றும், அதனால் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள், திட்டமிட்டப்படி நாளை (இன்று) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறிவிட்டோம்.

ஊதிய குழு விஷயத்தில் அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். ஒரு மாதம் ஆனாலும் சரி, போராட்டத்தை கைவிட மாட்டோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எங்கள் மீது 'எஸ்மா' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்பட மாட்டோம். எங்களை சிறையில் தள்ளினாலும் பரவாயில்லை.

ஆஜராக மாட்டார்கள்

நாங்கள் எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். வேலை நிறுத்தம் 10 லட்சம் ஊழியர்களின் முடிவு ஆகும். எங்களின் சங்கத்தில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். ஆசிரியர்கள் சங்கம், சுகாதார ஊழியர்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் உள்பட அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்களும் இதில் கலந்து கொள்கின்றன.

வேலை நிறுத்த போராட்ட காலத்தில் ஊழியர்கள் பணிக்கு ஆஜராக மாட்டார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு துணியை கையில் கட்டி பணிக்கு ஆஜராவார்கள். மின்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். அரசு கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டத்தில் உறுதிமொழி அளித்தது. அதனால் இப்போது வெறும் உறுதிமொழி அளித்தால் போதாது.

ரூ.12 ஆயிரம் கோடி மிச்சமாகிறது

அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம். நாட்டிலேயே கர்நாடக அரசு ஊழியர்கள் தான் குறைந்த சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் வளர்ச்சியில் கர்நாடகம் முதல் 5 இடங்களில் உள்ளது. கர்நாடக அரசு துறைகளில் 39 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி மிச்சமாகிறது. காலியிடங்களால் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஷடக்சரி கூறினார்.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு சேவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்