21 நாளில் 511 கி.மீ. நடைபயணம்: கர்நாடகத்தில் இன்று முதல் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார்
கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். அவர் 21 நாளில் 511 கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளனர்.
பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். அவர் 21 நாளில் 511 கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளனர்.
ராகுல் காந்தி பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத்ஜோடோ' என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். அவரது இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வருகிறது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுப்பேட்டைக்கு வருகிறது. கேரளாவில் மட்டும் 19 நாட்கள் இந்த பாதயாத்திரை நடந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று கர்நாடகத்தில் தொடங்குகிறது.
அங்கு ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கர்நாடக காங்கிரஸ் கட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பாதயாத்திரை கர்நாடகத்தில் 21 நாட்கள் 511 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானாவுக்கு செல்கிறது. வருகிற 19-ந் தேதி பல்லாரியில் பிரமாண பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையின் நடுவே தசரா பண்டிகையையொட்டி 2 நாட்கள் விடுமுறை எடுக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை நடைபெறும் நாட்களில் ஏதாவது ஒரு நாள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.
காங்கிரசார் புகார்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. ராகுல் காந்தியை வரவேற்று குண்டலுபேட்டையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை மர்ம நபர்கள் சிலர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்குள்ள போலீசில் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர்.
இந்த பாதயாத்திரை மூலம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. பாதயாத்திரை பயணிக்கும் தொகுதிகளில் உள்ளூர் கட்சி தொண்டர்களை அதிகளவில் கலந்து கொள்ள வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
சித்தராமையா செல்வாக்கு
மேலும் பாதயாத்திரை செல்லும் வழியில் விவசாயிகள், மடாதிபதிகள், பெண்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், பொதுமக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் பல்லாரி உள்பட பல்வேறு நகரங்களில் கட்சி பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் பிரமாண்டமான முறையில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் காங்கிரசில் சித்தராமையாவின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரித்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, பெரும் கூட்டத்தை திரட்டி அதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்து காய் நகா்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.