கன்னட நடிகை ஸ்பந்தனா திடீர் மரணம்

நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி நடிகை ஸ்பந்தனா தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Update: 2023-08-07 18:45 GMT

பெங்களூரு:

நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி நடிகை ஸ்பந்தனா தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

விஜய் ராகவேந்திரா

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல கன்னட திரைப்பட நடிகர் விஜய் ராகவேந்திரா. அவரது மனைவி ஸ்பந்தனா(வயது44). ஸ்பந்தனா தனது உறவினர்களுடன் சுற்றுலாவுக்காக தாய்லாந்துக்கு சென்றார். விஜய் ராகவேந்திராவும் சினிமா படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தாய்லாந்துக்கு சென்று அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்பந்தனா தூங்க சென்றார். அவர் மீண்டும் எழவில்லை. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஜய் ராகவேந்திராவின் சகோதரர் முரளி நிருபர்களிடம் கூறுகையில், 'விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா நேற்று இரவு தூங்க சென்றுள்ளார். காலையில் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். தாய்லாந்தில் உள்ள எனது சகோதரர் என்னிடம் செல்போனில் பேசி இந்த தகவலை கூறினார்' என்றார்.

ஸ்பந்தனா எழவில்லை

மரணம் அடைந்த ஸ்பந்தனா பெங்களூரு முன்னாள் போலீஸ் அதிகாரி பி.கே.சிவராமின் மகள் ஆவார். மேலும் ஸ்பந்தனா காங்கிரஸ் மூத்த தலைவரான பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி.யின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 'அபூர்வா' என்ற கன்னட படத்தில் ஸ்பந்தனா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஸ்பந்தனா மரணம் குறித்து பி.கே.ஹரிபிரசாத் நிருபர்களிடம் கூறும்போது, 'தூங்க சென்ற ஸ்பந்தனா காலையில் எழவில்லை. மாரடைப்பால் அவர் இறந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்' என்றார்.

ஸ்பந்தனா மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று உடல் பெங்களூருவுக்கு வருகிறது

ஸ்பந்தனா மரணம் அடைந்த செய்தி அறிந்து கன்னட திரையுலகினர் விஜய் ராகவேந்திராவின் வீட்டிற்கு நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். கன்னட சினிமா வர்த்தக சபை முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்த், நடிகை ஜெயமாலா, நடிகர் சிவராஜ்குமார் உள்பட கன்னட திரைஉலகினர் பலர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.

ஸ்பந்தனாவின் உடல் இன்று பகல் 12 மணியளவில் பெங்களூரு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (புதன்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்