டெல்லி; காரில் இழுத்துச்செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரம்: மேலும் ஒருவர் கைது

தலைநகர் டெல்லியில் காரில் இழுத்துச்செல்லப்பட்டு பலியான இளம் பெண் வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-01-06 03:20 GMT

(ANI)

புதுடெல்லி,

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் அமர்ந்து சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி மட்டும் இன்றி நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரையும் காப்பாற்ற முயன்ற வழக்கில் அஷுடோஷ் என்பவர் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய அன்கூஷ் கன்னா என்ற மற்றொருவரையும் டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்